சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாகும் நிலை வரும்- கிரண் ரிஜிஜு பேச்சு
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
இந்தியாவில் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு சவால்கள் நம் முன்பாக உள்ளன. நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிற நாடுகளில் நீதிபதிகள் மிகவும் சவுகரியமாக வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 5,6 வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.
அதனால் ஏற்படும் மன அழுத்தம் அதிகம். சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. வழக்குகள் முடியும் அதே நேரத்தில் இரு மடங்கு வழக்குகள் புதிதாக தாக்கலாகின்றன. அதனால் தான் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உரிய நீதி வழங்கப்படும் போது, நீதிமன்றங்கள் மீதான சாமானியரின் நம்பிக்கை உயர்கிறது.
நீதிமன்றத்தில் மொழி, மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதி மன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும். இந்திய மொழிகள் நீதி மன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களும் எளிதாக அணுகும் வகையில் நீதிமன்ற கட்டமைப்பு விரைவில் அமையும்.
பொதுமக்கள் காவலர்களை பார்த்தால் அச்சப்படும் விதமாக இருக்கக் கூடாது. பாதுகாப்பாக உணர வேண்டும். அதே போல் பொதுமக்கள் நீதி மன்றத்தை எளிதில் அணுகும்படி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.