Police Recruitment

யாசகம் எடுக்கத்தடை- கேரளாவை போல் தமிழகத்திலும் பின்பற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

யாசகம் எடுக்கத்தடை- கேரளாவை போல் தமிழகத்திலும் பின்பற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பள்ளத்தாக்குகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இங்குள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், தவழந்து செல்லும் மேகங்கள், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான சீதோசனம் போன்றவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து வருகின்றன.

கேரளாவை பொறுத்தவரை அரசின் முக்கிய வருவாயாக ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் விளங்கி வருகின்றன. இதனால் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுடன் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இப்பகுதிகளில் யாசகம் எடுக்கத்தடை விதித்து இதற்காக போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,

மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர். இவர்களிடம் யாசகம் கேட்பதால் நம் நாட்டினர் மீது மாறுபட்ட கருத்தியல் சூழல் நிலவுகிறது. மேலும் யாசகர் போர்வையில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அனுப்பி வருகிறோம். எங்களுடன் இணைந்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளும் பணியாற்றி வருகிறோம்.
இதனால் கேரளாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்திலும் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.