வெளியே பார்த்தால் ஜூஸ் பெட்டி உள்ளே வகைவகையா மதுபாட்டில்- சோதனையில்
ஓமலூர் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 மது பாட்டில்களை இரும்பாலை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட அண்ணன் தம்பி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர், மதுபான கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஓமலூரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுவிலக்கு போலீசார் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து டெம்போ வாகனத்தில் மதுபானம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட பொலிரோ பிக்அப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புரூட்டி ஜூஸ் பெட்டி அடுக்கி வைக்கப்படடிருந்தது. அதை பிரித்துப் பார்க்கும்போது அதன் உள்ளே வகை வகையான மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பது தெரியவந்தது. இதில், மொத்தம் 25 பெட்டிகள் இருந்தன. இதில், ஒவ்வொரு பெட்டியிலும் 180 மில்லி லிட்டர் கொண்ட 48 பாட்டில்கள் வீதம் 1200 பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் 1.5 லட்சம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்அப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த ஜோடுகுழி பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன் (37), ரமேஷ் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.