கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரம், ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் (எ )அருண்குமார் என்பவரை கடந்த 10.06.2021- அன்று மதியம் சுமார் 01.30 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் ஆகிய இருவரும் அருண்குமாரை தொலைபேசியில் அழைத்து பிரச்சனை செய்து வருவதாகவும், அவர்கள் கூரிய இடத்திற்கு உடனே வரவேண்டும் என கூறியதாக தனது பாட்டியிடம் கூறி சென்றவர்.
எதிரிகள் இருவரும் சம்பவ இடத்தில் கொடூர ஆயுதங்களால் தாக்கி அருண்குமாரைக் கொலை செய்ததாக அருண்குமாரின் பாட்டி சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளர், அருண்குமாருக்கும், எதிரிகள் ஜாகீர்உசேன் மற்றும் பிரேம் கண்ணன் ஆகியோருக்கும் இடையே கஞ்சா விற்பனைக்கு தொடர்பாக பகை இருந்துள்ளதும், அதன் காரணமாக சம்பவத்தன்று எதிரிகள் இருவரும் திட்டமிட்டு சம்பவ இடத்திற்கு அருண்குமாரை வரவழைத்து திட்டமிட்டபடி கத்தி மற்றும் அருவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேற்படி வழக்கின் எதிரிகள் ஏர்போர்ட், காமராஜர் நகர், மாதவி தெருவைச் சேர்ந்த ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் (21), மற்றும் 2. ஏர்போர்ட், கலைவாணர் தெரு, பிரேம் கண்ணன் (21) ஆகிய இருவரையும் கடந்த 11.06.2021 அன்று கைது செய்து, அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கொடூர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் 1. ஜாகீர் உசேன் வயது 21, மற்றும் 2.பிரேம் கண்ணன் வயது 21, ஆகிய இருவரும் தொடர்ந்து இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை, கொலை மிரட்டல், கொலை மற்றும் பொதுமக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால்,
இவர்களது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு மேற்படி 2 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள ஏர்போர்ட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதன்படி மேற்படி எதிரிகள் இருவரும் 06.09.2021 இன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஆணை சார்வு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.