தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் – 35, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் – 15 என மொத்தம் 51 வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 கைப்பற்றப்பட்ட பொருள்கள் முடிவு செய்தல் தொடர்பான திருத்தப்பட்ட சட்டம் விதிகள் 1979ன்படி பொது ஏலத்தில் விட்டு அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 51 வாகனங்களும் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் 04.10.2021 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி வாகனங்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 23.09.2021 முதல் (காலை 09.00 முதல் மாலை 06.00 மணி வரை) பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூபாய். 1000 (ஆயிரம்) முன்பணமாக ஏலம் விடப்படும் நாளன்று காலை 09.00 மணிக்கு கட்ட வேண்டும்.
முன்பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்: 0461 2341391 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.