தற்காலிக பட்டாசு கடைகளில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து- மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு
தற்காலிக பட்டாசு கடைகளில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து- மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேற்படி தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களில் உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் திருச்சி,மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் அலுவலக வளாகம், மாநகர ஆயுதப்படை, திருச்சி, தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை முதலாம் அணி அலுவலக வளாகம், C.ரெங்கசாமி, பெரியகடை வீதி, திருச்சி, அமராவதி, நுகர்வோர் கூட்டுறவு அங்காடி, திருச்சி மற்றும் K.சுகந்தி, பாலக்கரை மெயின்ரோடு, திருச்சி ஆகியோர்கள் மற்றும் 53 நபர்கள் என மொத்தம் 59 நபர்களுக்கு, நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் உரிமம் வழங்கியுள்ளார்.
சில பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தீயணைப்பு உபகரணங்கள் அதிக அளவில் வைத்திருக்க வேண்டும், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குழந்தைகளைபட்டாசு கடை அருகில் அனுமதிக்க கூடாத ,தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், கோவிட்-19 காரணமாக முகக்கவசம் கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும், எதிரெதிரே பட்டாசு கடைகள் நடத்தக்கூடாது. ஒவ்வொரு பட்டாசு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவைவிட கூடுதலாக சேமிப்பு வைத்திருக்க கூடாது, கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது, மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது, உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்கள்.
மேற்படி நிபந்தனைகள் மற்றும் வெடிபொருள் சட்ட விதிகளை உரிமதாரர்கள் மீறும்பட்சத்தில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாசு உரிமம் எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.