கோவையில் போலி செக் தயாரித்து 10 லட்சம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் மில் நடத்தி வருபவர் கல்யாணசுந்தரம் (55). இவர் கோவை கணபதி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நடப்பு கணக்கு வைத்துள்ளார்.
இவர்களது நிறுவனத்தின் மூலம் பண வரவு செலவுகள் அனைத்தும் ஆன்லைன் மற்றும் செக் மூலம் நடத்தப்படுவது வழக்கம். மேலும், அதிக அளவிலான தொகை குறித்த வரவு செலவுகள் வங்கி மூலம் மில் அலுவலக செல்போன் எண்ணுக்கு அழைத்து உறுதி செய்தபின் பரிவர்த்தனை செய்வது வழக்கமான ஒன்று.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்யாண சுந்தரத்தின் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து பத்து லட்ச ரூபாய் டெல்லியிலுள்ள சுரேஷ்குமார் மேத்தா என்பவரின் கனரா பேங்க் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டதாக மெசேஜ் வந்தது.
இதனையடுத்து, கல்யாணசுந்தரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கணபதி கிளை மேனேஜரிடம் இது குறித்து கேட்டார். அப்போது வங்கி மேனேஜர் நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக உள்ள செக் மூலம் பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
அந்த செக்கை சோதித்துப் பார்த்த பொழுது அது போலியாக தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கல்யாணசுந்தரம் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் போலி செக் தயாரித்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மேத்தா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.