Police Department News

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் உயர் அதிகாரி களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி சிறப்பாக நடந்து முடிந்தது.

தேர்தல் சமயத்தில் சிறிய பிரச்னைகள் எழுந்த போது, அவற்றை தைரியமாகவும், சமயோஜிதமாகவும் காவல் துறை எதிர்கொண்டது.
இதற்காக இரவும், பகலுமாய் அயராது பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவருக்கும் பாராட்டுகள். இனி பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறையில் அடைக்க வேண்டும்

கண்டுபிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும்

தொடர்ந்து தவறு செய்யும் ரவுடிகளை, மாவட்ட வருவாய் அதிகாரி முன் ஆஜர்படுத்தி, நல்லொழுக்கப் பத்திரம் பெற வேண்டும்; மீறுபவர்களை ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தினமும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்

எல்லா இடங்களிலும், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்த வேண்டும். வாகன விபத்துகளை குறைக்க செயல் திட்டம் வகுக்க வேண்டும்

குற்றவாளிகளின் படங்கள் மற்றும் ‘வீடியோ’க்களை ஆவணப்படுத்த வேண்டும். இதன் வாயிலாக அவர்களை, பிற்காலத்தில் எளிதில் அடையாளம் காணலாம். இவ்வாறு சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.