Police Department News

பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள்

மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது, போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை அள்ளுதல், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அதனை மீறி பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி தொழிலளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் உள்ளன. இங்கு நாள்தோறும் அடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் கையுறை, முகக்கவசம் என எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியில் ஈடுபட்டனர். கோர்ட்டு எச்சரித்து இருந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் இது போன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இனிமேலாவது நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற அறிவுறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.