பொள்ளாச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்-பெண் உயிரை பறித்த பிரிட்ஜ் வெடித்தது எப்படி?- நீடிக்கும் மர்மங்கள்
சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சபரிநாத். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி ஆகும்.
சபரிநாத் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட வீடு கட்டி வசித்தார். சபரிநாத்தின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது 15 வயது மகன் உறவினர் வீட்டில் வசிக்கிறார்.
சபரிநாத்தின் கீழ் வீட்டை கணவரை பிரிந்து வாழும் சாந்தி (37) என்ற பெண்ணுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தால் சபரிநாத் மேல் தளத்தில் தங்கிக் கொள்வார்.
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சபரிநாத் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். நேற்று காலை அவர் தங்கியிருந்த மாடி வீட்டில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. திடீரென அங்கிருந்து புகையும் கிளம்பி வந்தது.
அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அப்போது மாடி வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனை உடைத்துக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அங்கு பரவியிருந்த தீயை போராடி அணைத்தனர்.
புகை வெளியேறிய பின் பார்த்தபோது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி கருகிக் கிடந்தது. சமையல் அறையில் இன்ஸ்பெக்டர் சபரிநாத்தும், கீழ் வீட்டில் வசிக்கும் சாந்தியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.
சாந்தி, சபரிநாத்துக்கு சமையல் செய்து கொடுக்கச் சென்றதாகவும், அப்போது குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. சபரிநாத்தும், சாந்திக்கும் என்ன மாதிரியான பழக்கம் இருந்தது, அந்த பழக்கத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தற்கொலை முடிவு எதுவும் எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.
தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு முழுக்க சமையல் கியாஸ் பரவி இருந்துள்ளது, இதனால் 2 பேரில் யாராவது ஒருவர் கியாசை திறந்து விட்டு தற்கொலை முயற்சி எடுத்து குளிர்சாதன பெட்டி வெடித்ததா அல்லது மின் பிரச்சினை காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்ததா? என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.
சபரிநாத்துக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் எதாவது விபரீத முடிவை எடுத்தாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பலியான சபரிநாத் மற்றும் சாந்தியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.