Police Department News

கோர்ட்டு வளாகத்தில் திராவகம் வீசப்பட்ட பெண் உயிரிழப்பு

கோர்ட்டு வளாகத்தில் திராவகம் வீசப்பட்ட பெண் உயிரிழப்பு

கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறித்ததாக கவிதா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று வந்த பின்னர் அவருக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் கண்டித்தும், கவிதா கேட்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கவிதா வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி கோவை கோர்ட்டுக்கு ஆஜராக வந்தார். இதனை அறிந்த சிவக்குமாரும் அங்கு வந்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கவிதாவை பார்த்த, சிவக்குமார் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்த கவிதா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

திராவகம் வீச்சில் 85 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கவிதாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சுமார் ஒரு மாதமாக கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

திராவகம் வீச்சில் காயமடைந்த கவிதா இறந்துவிட்டதால், கொலை முயற்சி வழக்கை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.