இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சுவேதா கார்த்திக். பட்டதாரியான இவர் படிப்புக்கேற்ற வேலை தேடி வந்துள்ளார். அதற்காக பல இணையதளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் மங்கம் மாள்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாகவும், தன்னால் வெளிநாட்டில் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது போட்டோ அடையாள அட்டை உள்ளிட்டஆவணங்களை செல்போனில் அனுப்பி உள்ளார். அதை பார்த்து நம்பிய சுவேதா அவரிடம் வேலை தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.
அப்போது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சிங்கப்பூர் கிளையில் பணி வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பணியை பெற ரூ.2 லட்சம் செலவாகும் என்றும் கூறி உள்ளார்.
இதையடுத்து 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை பாலமுருகனின் வங்கி கணக்குக்கு சுவேதா அனுப்பி வைத்தார். பின்னர் வேலைக்கான பணி ஆணையை போல முருகன் அனுப்பி வைத்து உள்ளார்.
அதில் பணி மற்றும் சம்பள விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுகுறித்து பால முருகனிடம் சுவேதா விவரம் கேட்டார். அப்போது மேலும் ரூ.2 லட்சம் தேவைப்படும் என்றும், பணத்தை செலுத்திய பின்பு நிறுவனத்தில் இருந்து முறையான அழைப்பு வரும் என்று பாலமுருகன் கூறியுள்ளார். பணி ஆணை வந்து விட்டதால் வேலை உறுதி என நம்பிய சுவேதா மீண்டும் ரூ.2 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் நிறுவனத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுவேதா அது தொடர்பாக பாலமுரு கனை தொடர்பு கொண்டார். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசி உள்ளார். அதன் மூலம் பாலமுருகன் தன்னை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார் என்பது சுவேதாவுக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைவாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த பாலமுருகனை தேடி வருகின்றனர்.