நத்தம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக அதிக அளவில் குட்கா கடத்தப்படுகிறது.
போலீசார் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி காரில் குட்கா கடத்திவரப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் – இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப் -இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் நத்தம் – அய்யாபட்டி சாலையில் உள்ள தேங்காய் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த சொகுசுகாரில் விற்பனைக்காக 500 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காரில் குட்கா கடத்தி வந்த ஊராளிபட்டியை சேர்ந்த சுதாகர்(வயது35), நத்தத்தை சேர்ந்த முகமது ஈசாக் (34), ஜஹாங்கீர் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து 500 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய கார் டிரைவர் ராகுல், நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.