போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து தேர்ச்சி பெற்று வீட்டில் உள்ளார். இவரும் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (23) என்ற இறைச்சி கடை வியாபாரியும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விபரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் மகளை காணாமல் பல இடங்களில் தேடிய மாணவியின் பெற்றோர் இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் காதல் ஜோடி தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்கும்படி வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த திருமணத்தை மாணவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து தனது பெற்றோர் வாங்கிக் கொடுத்த தோடு, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட அனைத்து தங்க நகைகளையும் போலீசார் முன்னிலையில் கழற்றி தனது தாயிடம் கொடுத்து விட்டு எனக்கு பெற்றோர் வேண்டாம். காதல் கணவர்தான் வேண்டும் என எழுதிக் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவரது தாய் கண்ணீர் மல்க இனிமேல் தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் காதலனின் குடும்பத்தினரிடம் அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர். இதனையடுத்து காதல் கணவருடன் மாணவி புறப்பட்டுச் சென்றார்.