Police Recruitment

பெண்ணிடம் நகை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்

பெண்ணிடம் நகை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சபரிஅம்மாள் (வயது 40). நேற்று காலை இவரது வீட்டின் முன்பு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் சபரி அம்மாள் விசாரித்தபோது, பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளனர்.

அதனை நம்பிய சபரி அம்மாள் தனது 4 பவுன் தாலி செயினை எடுத்து பாலீஷ் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து நகையை பாலீஷ் போட்டு சபரி அம்மாளிடம் அந்த வாலிபர்கள் கொடுத்தனர்.

அப்போது நகையின் எடை குறைந்திருப்பதாக சபரி அம்மாள் உணர்ந்தார். அதுகுறித்து அந்த வாலிபர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சபரிஅம்மாள் அவர்களிடம் மீண்டும் கேட்டுள்ளார்.

உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்தனர். அதில் ஒரு வாலிபரின் கையை சபரிஅம்மாள் இறுக்கி பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அந்த வாலிபர் சபரி அம்மாளின் கையை உதறி விட்டு ஓடி உள்ளார்.

சபரிஅம்மாளின் சத்தத்தை கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மிதுன்குமார், சர்வன்குமார் என்பது தெரியவந்தது. நகையை எடைபோட்டு பார்த்தபோது 26 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து சபரி அம்மாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.