மதுரை மேலூர் அருகே போர்வை வியாபாரியாக நடித்து கஞ்சா கடத்தியவர் கைது
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் வீதி வீதியாகச் சென்று போர்வைகள் விற்று வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த போர்வைகள் குளிரை தாங்கும் என அவர்கள் கூறுவதை நம்பி ஏராளமானோர் வாங்கி வருகின்றனர். போர்வை வியாபாரத்தை பயன்படுத்தி போதைப் பொருளான கஞ்சாவை சிலர் விற்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் மேலூர் சத்தியபுரம் 4 வழிச்சாலை பகுதியில் போலீஸ்காரர்கள் கோபால் மற்றும் முத்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக போர்வைகளுடன் நின்றவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர் வைத்திருந்த போர்வைகளை சோதனை செய்தபோது அதற்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போர்வைக்குள் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கொண்டு வந்தவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பாண்டி (வயது 50) என்பதும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் ஒரிசாவிற்கு சென்று போர்வை வாங்குவது போல் வாங்கிவந்து அதனுடன் கஞ்சாவையும் விற்று வந்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.