தனியார் வங்கியில் ஏ.சி. வெடித்து தீவிபத்து: ஆவணங்கள் எரிந்து சேதம்- போலீசார் விசாரணை
தருமபுரி நேதாஜி நகரில் டவுன் போலீஸ் நிலையம் அருகே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் சுமார் 900-க்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இவர்கள் வார வேலைநாட்களில் தினமும் வங்கிக்கு வந்து பணம் செலுத்துவது, எடுப்பது போன்ற பணபரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி தனியார் வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்து வங்கியை திறந்தனர். அப்போது ஏ.சி., பேன் உள்ளிட்ட மின்சாதனங்களை ஆன் செய்தனர்.
அப்போது பணம் மற்றும் ஆவணங்கள் பத்திரமாக வைத்திருக்கும் லாக்கர் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து திடீரென்று புகை கசிந்தது.
சிறிது நேரத்தில் திடீரென்று குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் வெடிசத்தம் கேட்டது. அப்போது வங்கிக்குள் புகைமூட்டமாக காணப்பட்டன.
இதைத்தொடர்ந்து லாக்கர் வைத்திருக்கும் அறை தீப்பிடித்து எரிந்தது. உடனே வங்கிக்குள் இருந்த வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஊழியர்கள் தருமபுரி டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாக்கர் இருந்த அறைக்கு சென்று தீயை அணைத்தனர்.
மேலும், அங்கு எரிந்து கொண்டிருந்த ஆவணங்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த தீவிபத்து அறிந்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், லாக்கர் அறையில் இருந்து ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு வெடித்ததால் இந்த தீவிபத்து நடத்திருக்கலாம் என்று தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி நகரில் வங்கியில் இன்று காலை ஏ.சி. வெடித்து தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.