Police Recruitment

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பெண் நீதித் துறை நடுவர் முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முருகன் (34) என்பவரை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் 17.4.2023-ல் கைது செய்தனர். அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: சிறுமியின் வாக்குமூலத்தில் போலீஸார் சொல்வது போன்று எதுவும் இல்லை. மனுதாரர் சிறுமியை அடிக்கடி அடித்துள்ளார். இதனால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 2 வாரங்களுக்கு போக்சோ நீதிமன்றத்தில் தினமும் காலை, மாலையில் கையெழுத்திட வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடாது.

இந்த வழக்கில் சிறுமியிடம் கேள்வி – பதில் முறையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-வது பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தை ஆண் நீதித் துறை நடுவர் பதிவு செய்துள்ளார். பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை 164-வது பிரிவின் ரகசிய வாக்குமூலம் அளிக்க பெண் நீதித்துறை நடுவர் முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும். அந்த ரகசிய வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட உறையில் பாதுகாக்க வேண்டும். விசாரணையின்போது அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என பலமுறை கூறியுள்ளது.

இதனால், பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164 பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக பெண் நீதித் துறை நடுவர் முன்பு தான் ஆஜர்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து விசாரணை அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.