மதுரைக்கு முதல் பரிசு.. முகமது ஜூபேர் முதல் பூர்ணம் அம்மா வரை.. குடியரசு தின விழா விருதுகள் விவரம்
குடியரசு தின விழாவில் மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்காக முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. தமிழகத்தில் குடியரசு தின விழாவில் யார் யாருக்கு என்ன விருதுகள் வழங்கப்பட்டன என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார்.
முன்னதாக காலை 7.50 மணி அளவில் போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, ராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. அத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறை , தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை ஊடகவியலாளர் முகமது ஜூபேர் பெற்றார்.
நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட எஸ்பி சாசாங் சாய், சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி பா.காசி விஸ்வநாதன், எஸ்ஐ பாண்டியன், தலைமை காவலர் ரங்கநாதன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முனியாசாமி உள்பட ஐந்து பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
நெல்லை டேனியல் செல்வசிங், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமாருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டது.
மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்காக முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. சிறந்த காவல் நிலையத்திற்கான 2ஆம் மற்றும் 3ம் பரிசை நாமக்கல், பாளையங்கோட்டை காவல் நிலையங்கள் பெற்றன.
தனக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த பூர்ணம் அம்மாளுக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருது வழங்கினார்.
.