குட்கா, மாவா புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 114 குற்றவாளிகள் கைது
கடந்த 9 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 114 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
604.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் 41.7 கிலோ மாவா, 1,312 இ-சிகரெட்டுகள் மற்றும் 5,69,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABTOP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 04.03.2024 முதல் 12.03.2024 வரையிலான 9 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 114 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 604.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 41.7 கிலோ மாவா, 1,312 இ-சிகரெட்டுகள், 5,69,800 வெளிநாட்டு சிகரெட்டுகள், 5 செல்போன்கள், பணம் ரூ.8,060/-, 3 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டு, 1,312 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 12.03.2024 அன்று சௌகார்பேட்டை, ஆதியப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு கிடங்கு முன்பு இலகுரக சரக்கு வாகனத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்தது தொடர்பாக C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, 5,69,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 1 இலகுரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 12.03.2024 வரை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 14 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.