வடமாநிலத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: 14 கிலோ பறிமுதல்
வடமாநிலமான மேற்குவங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பவுடர்களை ரயில்களில் ஒருசில மர்ம கும்பல்கள் கடத்தி வருகின்றனர்.
இவற்றை தடுக்கும் வகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிக்கடி ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, அதிரடி சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் நேற்றிரவு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.
அந்த ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் பெரிய கைப்பையுடன் 2 பேர் சந்தேக நிலையில் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் போலீசாரை தப்பியோட முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் விரட்டி சென்று, மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
பின்னர் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து, அவர்களின் கைப்பையை சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் 14 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த டோலி காடுன் (27), பூஜாகுமாரி தாஸ் (26) என்பதும், இவர்கள் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் குறிப்பிட்ட சில நபர்களிடம் விற்பனை செய்வதற்காக காத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 14 கிலோ கஞ்சா மற்றும் 2 பேரையும் பூக்கடை காவல் நிலையத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 மேற்குவங்க வாலிபர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.