Police Department News

ட்ரூ காலர் மூலம் பல பெண்களுடன் தொடர்பு… மோசடி இளைஞர் சிக்கியது எப்படி..?

ட்ரூ காலர் மூலம் பல பெண்களுடன் தொடர்பு… மோசடி இளைஞர் சிக்கியது எப்படி..?

வினோத்தின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட, பல்வேறு மாநில பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

ட்ரூ காலர் மூலம் பெண்கள் நம்பரை எடுத்து, அவர்களை காதல் வலையில் வீழ்த்தி, தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்த இளைஞரை திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து காதல் குறுஞ்சய்திகள் வந்துள்ளன. ஸ்பேம் குறுஞ்செய்தி என அந்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த எண்ணிலிருந்து அந்த பெண்ணுக்கு காதல் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி அந்த செல்போன் எண்ணை தொடர்புக்கொண்டு கண்டித்துள்ளார். இதைப்போன்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த எண்ணிலிருந்து குறுஞ்செய்திக்கு பதிலாக ஆபாச படங்கள் வர தொடங்கியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் இருதயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பெண் புகார் அளித்த எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த மொபைல் எண் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயதான வினோத் என்பவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து வினோத் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மும்மூர்த்தி நகரில் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், வினோத்தை கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ட்ரூ காலர் செயலி மூலம் ஏதேனும் ஒரு 10 இலக்க எண்ணை பதிவிடும் வினோத், அதில் பெண்கள் பெயர் எதுவும் வந்தால் அந்த எண்ணை தனது போனில் பதிவு செய்து வைத்துக்கொள்வார். பின்னர் அவர்களுக்கு காதல் குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்குவார். அவர்கள் தரப்பிலிருந்து பதில் வந்தால், அது தனக்கான கிரீன் சிக்னலாக நினைத்து, தனது வலையில் சிக்க வைத்துவிடுவார்.

வினோத்தின் ஆசை வார்த்தையிலும் பேச்சிலும் மயங்கிய சில பெண்கள், தன்னிலை மறந்து வாட்ஸ்ஆப்பில் தங்களின் அந்தரங்க படங்களையும், வீடியோக்களையும் அனுப்பத் தொடங்கியதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அந்த அந்தரங்க படங்களை வைத்தே அந்த பெண்களை மிரட்டி தனது பாலியல் இச்சைக்கு வினோத் பயன்படுத்தி வந்ததுள்ளதும் தெரிய வந்துள்ளது.

வினோத்தின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் சுமார் 50க்கும் மேற்பட்ட, பல்வேறு மாநில பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து வினோத்தை கைது செய்த நாற்றம்பள்ளி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்பின் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து வரும் ஆபாச குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தால் தயங்காமல் அந்த எண்ணை பெண்கள் ப்ளாக் செய்ய வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எந்த காரணத்திற்காகவும், யாருக்கும் தங்களது அந்தரங்க புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பெண்கள் பகிரக்கூடாது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.