Police Recruitment

சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..!

சாலை பாதுகாப்பு..! உயிர் பாதுகாப்பு..! வித்தியாசமான விழிப்புணர்வு..!

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை மாதவரம் ரவுண்டானா, திருவொற்றியூர், அண்ணா ஆர்ச், கொரட்டூர், ஸ்பென்சர் பிளாசா சிக்னல், பச்சையப்பாஸ் சிக்னல், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதன் இறுதி நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகில் நடைபெற்றது. இதில் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரை அமர வைத்து அவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரின் குரலில் பேசி போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பது குறித்து விஜே விஷ்வா எடுத்துரைத்தார். இதில் கலந்துகொண்ட போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், வீட்டில் இருந்து புறப்படக்கூடிய ஆண்களுக்கு போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என பெண்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். வெள்ளம், நில அதிர்வு இது போன்ற இயற்கை பேரிடர்களின் விளைவுகளை கூட காலப்போக்கில் சீர் செய்யலாம். ஆனால் சாலை விபத்து என்பது ஒரு நொடியில் நிகழக்கூடியது, எனவே குடும்பத்தை நினைவில் வைத்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் கடமையை உணர்ந்து பொதுமக்களை கவனமாக அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து பேசிய போக்குவரத்து இணை ஆணையர் (தெற்கு) லஷ்மி, ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்றும், அவ்வாறு விபத்து என்று சொன்னாலே சென்னை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும் எனவும் குறிப்பிடார்.

எனவே அதை மாற்றியமைக்க நாம் அனைவரும் விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என வழக்கம் போல் அவரின் பாணியில் ஒரு குட்டிக்கதை சொல்லி புரிய வைத்தார். பின்னர், சாலை விதிகளை பின்பற்றவது குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வணக்கம் இந்தியா நாளிதழின் தலைமை நிருபர் யூசுப் பாஷா வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் குமார், கூடுதல் துணை ஆணையர் திருவேங்கடம், உதவி ஆணையர் ஹிட்லர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.