திருச்சி மணப்பாறை அருகே கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது.
மேலும், ஆழ்துளை கிணற்றில் 29ஆம் தேதி இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாகவும், அடுத்த நாள் அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்அறிவித்தார்.
அதன்பின்னர் ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. நேற்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு முடிந்த பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலரின் புகாரையடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.