திருச்சி: மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலை அடிவாரத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இதற்காக குறிப்பிட்ட நாட்களுக்கு ராணுவ வீரர்கள் மலை அடிவாரத்தில் முகாமிட்டு, இந்த பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதற்கான பதுங்கு குழி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பயிற்சியின்போது பல்வேறு வகையான ராணுவ குண்டுகள் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் சிறிய அளவிலான குண்டுகள் தொடங்கி ராக்கெட் லாஞ்சர்கள் வரை இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படும்.
இதற்காக வீரமலை அடிவாரத்தில் எந்த பகுதியில் சென்று குண்டுகள் வெடிக்க வேண்டும் என்பதற்கான அடையாளங்களும், குறிப்பிட்ட பகுதியும் கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோல் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் தான் ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் குண்டும் வெடித்து சிதறும். சற்று பெரிய அளவிலான சில குண்டுகள் மலைப்பகுதியில் சென்று வெடிக்கும். வருடத்தின் பல்வேறு நாட்களில் இங்கு வந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், பயிற்சி முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வார்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது ஆகும்.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி முடித்து சென்றதும், அந்த பகுதியை சேர்ந்த சிலர் வெடித்த குண்டுகளின் பாகங்களை எடுத்துச் சென்று பழைய இரும்பு கடையில் விற்று பணம் பெற்றுக் கொள்வார்கள். இதேபோல் நாளடைவில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றையும் எடுத்துச் சென்று பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து வந்தனர்.
அவற்றை வாங்கும் பழைய இரும்பு கடை உரிமையாளர்கள் அல்லது தொழிலாளர்கள் அந்த குண்டுகளை உடைக்க முயற்சிக்கும் போது வெடித்து சிதறி உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கூட மாரியப்பன் என்பவர் குண்டு வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு பழைய இரும்பு கடையில் இருந்த 25 ராணுவ குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் இது தொடர்பான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் இடத்தில் உள்ள மலையடிவாரத்தில் குண்டுகள் இலக்கை சென்று அடையும் இடத்தில் பல்வேறு வகையான குண்டுகள் வெடிக்காமல் அப்படியே கிடக்கின்றன.
சிறிய தோட்டாக்கள் முதல் ராக்கெட் லாஞ்சர்கள் வரை கிடப்பதால், அவை திடீரென வெடித்து விடுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி சிலர் வெடிக்காத குண்டுகளை எடுத்து வீட்டில் வைத்திருப்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.