சென்னை: கொரோனா பரிசோதனை; மயக்க மருந்து – காவலர் மனைவியின் கொள்ளை நாடகம் அம்பலமானது எப்படி?
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வரும் காவலர் ஒருவரின் மனைவியின் கொள்ளை நாடகம் அறுந்து போன தாலிச் செயினால் அம்பலமாகியிருக்கிறது
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் தர்மராஜ் (27). இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ம் அணியில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சந்திரலேகா (24). இந்தத் தம்பதியினருக்கு மதியழகன் (4) என்ற மகன் உள்ளார். தற்போது சந்திரலேகா 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வழக்கம் போல காவலர் தர்மராஜ் வேலைக்குச் சென்று விட்டார். மகனுடன் சந்திரலேகா வீட்டில் இருந்தார்.தர்மராஜுக்கு போன் செய்த சந்திரலேகா, கொரோனா பரிசோதனைக்காக 2 பேர் கவச உடையணிந்து வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மூக்கில் குச்சியை விட்டு பரிசோதனை செய்தபோது தான் மயங்கிவிட்டதாகக் கூறினார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது பீரோவிலிருந்த ஐந்தரை சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாயைக் காணவில்லை என்று பதற்றத்துடன் கூறினார். கொரேனா பரிசோதனைக்கு வந்தவர்கள்தான் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றிருக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.அதைக்கேட்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டுக்கு வந்து தர்மராஜ் பார்த்தபோது பீரோவிலிருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. உடனடியாக கொள்ளைச் சம்பவம் குறித்து தர்மராஜ், திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸாரும் தடயஅறிவியல் துறை நிபுணர்களும் தர்மராஜ் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். பீரோவிலிருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். பிறகு சந்திரலேகாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் கணவரிடம் கூறிய அதே தகவலை தெரிவித்தார்.அதன்பிறகு அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் அக்கம் பக்கத்திலும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கவச உடையணிந்து யாரும் வரவில்லை என்று தெரிவித்தனர்.பீரோவில் சந்திரலேகாவின் கைரேகைகளைத் தவிர வேறு யாரின் ரேகைகளும் இல்லை என திருமுல்லைவாயில் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனால் சந்திரலேகாவின் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. ஆனால் அவரிடம் விசாரித்தபோது அதே பல்லவியை கண்ணீர்மல்க கூறினார். காவலர் குடியிருப்பில் கொரோனா கவச உடையணிந்து வந்து மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்தவர்கள் யாரென்று போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதற்கிடையே, தன்னுடைய நகைகளையும் பணத்தையும் தனக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்திருப்பதாகவும், நகை, பணத்தை கணவர் கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் கொள்ளைப் போனதாக நாடகமாடியதாகவும் உறவினர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார் சந்திரலேகா.அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரலேகாவின் உறவினர், இந்தத் தகவலை தர்மராஜிடம் தெரிவித்தார். பின்னர் அவர் சந்திரலேகாவைக் கண்டித்ததோடு திருமுல்லைவாயில் போலீஸாரிடம் விவரத்தைக் கூறி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து போலீஸார் சந்திரலேகாவை எச்சரித்து அனுப்பினர்.இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீஸார் கூறுகையில்,
காவலர் தர்மராஜ் என்பவரின் மனைவி சந்திரலேகா கூறிய தகவலையடுத்து அவரின் வீட்டுக்குச் சென்றோம். அப்போது, வீட்டின் பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும் சந்திரலேகாவின் தாலிச் செயினும் அறுந்த நிலையில் இருந்தது. பீரோவிலிருந்த நகைகள், பணத்தைத் திருடியவர்கள் தாலிச் செயினை மட்டும் ஏன் கொள்ளையடிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. அதுதொடர்பாக சந்திரலேகாவிடம் விசாரித்தபோது அவர் சிக்கிக் கொண்டார். கொள்ளைச் சம்பவம் நடந்ததைப் போல, பீரோவிலிருந்த பொருள்களை வீடுமுழுவதும் சிதறவிட்டிருக்கிறார். அதனால் கொள்ளை நடந்ததாக கருதி அந்தக் கோணத்தில் விசாரித்தோம்.கொரோனா பரிசோதனை என்ற பெயரில் சந்திரலேகாவிடம் கொள்ளையடித்துச் சென்றவர்களை தீவிரமாக தேடிவந்தோம். இந்தச் சமயத்தில்தான் சந்திரலேகா கோயிலுக்குச் சென்றபோது அறிமுகமான ஆண் நண்பரிடம் நகைகள், பணத்தை கொடுத்ததாகக் கூறினார். சந்திரலேகா யாரிடம் நகைகள், பணத்தை கொடுத்தார் என்று விசாரித்து வருகிறோம்” என்றனர்.அறுந்துப் போன தாலிச் செயின்தான் இந்த வழக்கில் சந்திரலேகாவைக் காட்டிக் கொடுத்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.