அதிநவீன கேமரா மூலம் நேரடியாக அபராதம் விதிக்கும் முறை
போக்குவரத்து வீதிகளை மீறும் வாகனங்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கும் முறை சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்ற பிறகு குற்றங்களை தடுப்பதில் புதிய முறைகள், தொழில்நுட்ப உதவியோடு விசாரணையை கையாளும் முறை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடி சந்திப்புகளை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் புகார் அளிப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட வழிமுறைகள் கையாளப்பட்டன.
அந்த வகையில் சென்னை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னல் அருகே அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையின் ஒருசில பகுதிகளில் ஏ.என்.பி.ஆர் (ANPR) எனப்படும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் தாமாகவே வாகனங்களின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.
இந்த வசதியானது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனங்களை காவலர்கள் கேமரா மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபருக்கு அபராத தொகைக்கான ரசீதை அனுப்பி வைப்பார்கள். இதன் அடுத்தகட்ட தொழில்நுட்பமாக மனிதர்களின் தொடர்பு இல்லாமல் நேரடியாக கணிணி மூலம் விதிமீறலை கண்காணித்து அபராதம் விதிக்கும் முறை உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விதிகளை மீறும் வாகனங்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே இருக்கும் ஏ.என்.சி.ஆர் கேமராவில், விதிகளை மீறும் வாகனங்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டு, அது நேரடியாக போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். அங்கிருந்து நேரடியாக அந்த வாகனம் பதிவு செய்யப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலம் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலும் அதற்கான அபராதம் குறித்த தகவலும் சென்று சேர்ந்துவிடும்.
ரெட் லைட் சிக்னலை தாண்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், வைட் லைனை மீறிச் செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களை கண்காணிக்க இந்த நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது. இதற்காக போக்குவரத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறையை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார்.