
இன்போசிஸ் நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரம் செய்து ரூ.5 கோடி வரை அபகரிக்க முயன்ற பெண் பொறியாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த சுகுமாறன் மனைவி மகேஷ்வரி (35). பிஇ பட்டதாரி. இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய பயிற்சி கட்டணத்துடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கடந்த வாரம் செய்தித்தாள் ஒன்றில் விளம் பரம் செய்திருந்தார். இதற்காக தல்லாகுளம் பகுதியிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றுக்கு நவ.16 அன்று நேர்காணலுக்கு இளைஞர்கள் அழைக்கப்பட்டனர்.
இது பற்றி தகவலறிந்த இன்போசிஸ் நிறுவன அதிகாரி மதுரை காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்ததோடு தல்லா குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நவ.,16 அன்று தல்லாகுளம் பகுதியிலுள்ள ஓட்டலை போலீஸார் கண்காணித்தனர். போலி விளம்பரத்தை நம்பி பிஇ, டிப்ளமோ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த சுமார் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெற்றோருடன் அங்கு திரண்டனர்.
நேர்காணல் தொடங்குவதற்கு முன்னதாக மதுரை நகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் சந்திரன், தல்லாகுளம் ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட போலீஸார், இன்போசிஸ் நிறுவன அதிகாரி களுடன் ஓட்டலுக்குச் சென்றனர்.
அங்கு ஆய்வு செய்தபோது மகேஷ்வரி, அவரது உதவியாளர் பூர்ணக்குமார் (35) ஆகியோர் போலியாக விளம்பரம் செய்து வேலைக்கு ஏற்ப ரூ. 50 ஆயிரம், ரூ. 1 லட்சம், ரூ.1.25 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் என்ற அடிப்படையில் பயிற்சிக் கட்டணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த இளைஞர்கள், பெண்கள், பெற்றோரிடம் முறைகேடு குறித்து போலீஸ், இன்போசிஸ் அதிகாரிகள் எடுத்துரைத்து அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
பூர்ணக்குமார் கடச்சனேந்தலில் ஆதித்யா என்ற பெயரில் கணினி மையம் நடத்துகிறார். இவர் மூலம் ஏற்கெனவே 4 பேர் மட்டும் வங்கி மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மகேஷ்வரிக்கு செலுத்தியது விசாரணையில் தெரிந்தது. இதைத் தொடர்ந்து மகேஷ்வரி, பூர்ணக்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து துணை ஆணையர் பழனிக்குமார் கூறியதாவது: மகேஷ்வரி ஏற்கெனவே ஐடி துறையில் பணிபுரிந்துள்ளர்.
இந்த அனுபவத்தின் மூலம் பூரணக்குமாரை உதவிக்கு வைத்துக்கொண்டு போலியான விளம்பரம் கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட முயன்றார். இன்போசிஸ் நிறுவனத்துக்கு இந்தத் தகவல் தெரிய வந்ததால் எங்களிடம் புகார் தெரிவித்தனர். இதன்மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்தோம்.
வேலை தேடுவோரின் நிலை மையைப் பயன்படுத்திக் கொண்டு ரூ.5 கோடி வரை சுருட்டி வெளியூர் தப்பிக்க இருந்தனர். ஆனால், அதைத் தடுத்துவிட்டோம்.
மகேஷ்வரி மீது ஏற்கெனவே திருச்சி, சென்னை யிலும் இது போன்ற மோசடியில் ஈடுபட முயன்றதாக புகார்கள் உள்ளன.
பெற்றோர்களும், படித்த இளைஞர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற பிரபல நிறுவனங்கள் பெயரில் விளம்பரம் வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.