Police Department News

8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தவர்கள் அதிரடி கைது காவல்துறை வட்டாரம் அதிர்ச்சி

8 மாதமாக போலி போலீஸ் ஸ்டேசன் நடத்தி வந்தவர்கள் அதிரடி கைது காவல்துறை வட்டாரம் அதிர்ச்சி

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் காவல்நிலையத்துக்கு 500 மீட்டர் தொலைவில் போலி காவல்நிலையம் ஒன்று செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி போலீஸார் சோதனை நடத்தியதில் மாவட்ட தலைமையகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே போலி காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

அங்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த காவல்நிலையம் கடந்த 8 மாதங்களாக செயல்பட்டு வருவதாகவும், அங்கு காவலர் சீருடையில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் உண்மையான போலீஸ் என நினைத்து வேலை செய்து வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

அதில் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த பெண் தன்னை அனிதா தேவி என அறிமுகம் செய்துள்ளார். மேலும் அவரிடம் நாட்டு துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. மேலும், ரமேஷ்குமார் என்பவர் எழுத்தராக பணியாற்றி வந்த நிலையில், ஆகாஷ் குமார் என்பவர் காவலர் சிருடையில் பணியாற்றி வந்துள்ளார். மொத்தம் அங்கு பணிபுரிந்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், போலா யாதவ் போலீஸ் மூத்த அதிகாரி என நினைத்ததாகவும், அவரே இவர்களை வேலைக்கு அமர்த்தியதும் தெரியவந்தது. மேலும், அதில் ஆகாஷ் என்பவர் போலா யாதவிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது.

இந்த காவல்நிலையத்தை உண்மையானது என நினைத்து சிலர் புகார் அளிக்கவும் வந்துள்ளனர். அதை இவர்கள் விசாரித்தும் வந்துள்ளனர். மேலும், ‘பாட்னா ஸ்கார்ட் டீம்’ என பெயர் வைத்து, அரசு கட்டுமானங்கள் எங்கு கட்டப்பட்டாலும் அங்கு சென்று விசாரணை நடத்தி பணம் வசூலிப்பதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும், தெருவோர கடைகளில் அடாவடியாக வசூல் செய்தும் வந்துள்ளனர். இத்தனை மாதங்கள் போலீஸாருக்கு தெரியாமல் போலிகாவல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து சீருடைகள், பேட்ஜ்கள், நாட்டுத்துப்பாக்கி. ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு தலைவராக செயல்பட்ட போலா யாதவ்வை போலிஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.