ஆர்டர்லி’ முறை ஒழிக்கப்பட்டதை, நான்கு மாதங்களில் உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி, இடமாறுதலுக்கு ஆளான அதிகாரிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அந்த அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார்.
அப்போது, உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீசார் பணியாற்ற, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.இவ்வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றிருப்பதாகவும், போலீசாரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கில், டி.ஜி.பி.,தாக்கல் செய்த பதில் மனுவில், ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், சில அதிகாரிகள் இதை பின்பற்றினாலும், ஆர்டர்லிகளை வாபஸ் பெற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் டி.ஜி.பி., தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் அளித்த உத்தரவாதம் மற்றும் டி.ஜி.பி., தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், ஆர்டர்லி முறை முழுமையாக ஒழிக்கப்பட்டதை, அரசு உறுதி செய்ய வேண்டும். நான்கு மாதங்களில் இந்த நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இருந்தால், உடனடியாக அவர்களை வாபஸ் பெற வேண்டும். புகார் ஏதும் வந்தால், உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீஸ் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.