Police Department News

கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்பசாமி கோவில் கட்டி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த கோவிலில் கீழ்புதூர், மேல்புதூர், ராஜாஜி நகர், லைன்கொள்ளை, செல்லாண்டி நகர், பெருமாள் நகர், ஆனந்த நகர், சோமார்பேட்டை, வெங்கடாபுரம், மேல்பட்டி, பூசாரிப்பட்டி, தண்ணீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 18 கிராம மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.

இந்த கோவில் கட்டப்பட்டுள்ள நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த நிலத்தின், 4,807 சதுர அடியை, ஓசூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு 96 லட்சம் ரூபாய்க்கு வீட்டு வசதி வாரியம் விற்றது. அந்த இடத்தில் கோவில் உள்ளதால் நிலத்தை கையப்படுத்துவதில் ராமச்சந்திரனுக்கு சிரமம் இருந்தது.

இது தொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோவிலை அப்புறப்படுத்தி நிலத்தை ராமச்சந்திரனிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட, 200 போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

கோவில் அருகே பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் அனைத்து புறங்களிலும் பேரிகார்டு வைத்து தடுக்கப்பட்டது. மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டன. கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 18 கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கருப்பசாமி கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோவில் தரப்பினருக்கும், ராமச்சந்திரன் தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மனோகரன், தலைமையில் நில அளவையர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து சென்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் பரபரப்பாக காணப்பட்டது….

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் சேகர் கிருஷ்ணகிரி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.