நமக்கோ அல்லது நமது பகுதியிலோ ஏதாவது குற்ற நிகழ்வு நடந்தால் நாம் அணுக வேண்டிய இடம் காவல் நிலையம் மட்டும்தானா?
நமக்கொரு பிரச்சினை என்றால், முதலில் காவல்நிலையத்தில் புகார் செய்கிறோம். நமக்குக் குற்றவியல் மற்றும் உரிமையியல் தொடர்பான எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், முதலில் நாம் அணுக வேண்டியது, தத்தமது கிராமத்தில் எந்நேரமும் வசிக்க வேண்டிய கிராமநிர்வாக அதிகாரியைதான்
ஆமாம், குற்ற விசாரணை முறை விதி 36 இன்படி, காவலர்களுக்கு தான் பணி செய்யும் பகுதியில் குற்றம் எதுவும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு கிராமத்திலும் எந்த விதமான குற்றமும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அக்கிராம நிர்வாக அதிகாரிக்கு உண்டு என, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் அத்தியாயம் 3, பிரிவு 2 இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அக்கிராமத்தில் வசிக்கும் குடிமக்களுக்கும், இதில் பொறுப்புண்டு என்பதால்தான்,
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடை முறைநூல் என பெயரிடப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
இப்படிக் குற்றம் நடைபெறாமல் தடுக்கவேண்டிய அரசு அதிகாரிகள் அதனைத் தடுக்காததன் விளைவாக இந்தியத் தண்டனைச் சட்டப்படி அல்லது வேறு தண்டனைச் சட்டப்படி நடந்துள்ள குற்றத்திற்காகக் குற்றமிழைத்த நபரைத் தண்டிக்கும் போது, இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119இன்படி, அக்குற்றத்தைத் தடுக்காது கடமை தவறிய அதிகாரிகளுக்கு குற்றவாளிக்கு விதிக்கும் அதிகபட்சத் தண்டனையில், பாதித் தண்டனையை கட்டாயம் விதிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.