மதுரை திருமங்கலம் அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது
திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பாரதிராஜா (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் ஜாமீன் பெற்று கடந்த 10-ந் தேதி பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு புதுப்பட்டியில் உள்ள டீக்கடையில் நண்பர் சரவணகுமாருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரதிராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
உடனிருந்த சரவணக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டியும், அவரது நண்பர்களும் என தெரியவந்தது. இதையடுத்து சந்தனபாண்டி, ராம கிருஷ்ணன், கோகுல்,பரத் பாக்கியராஜ் விக்கி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போலீசார் கைது செய்தனர். 5 பேரையும் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு 5 பேரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.