போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் சிறப்பு படை பிரிவு
மதுரை மாநகரில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு போலீசார் மூலம் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கரிமேடு, செல்லூர், கூடல்புதூர், தல்லாகுளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு ‘பாலியல் சீண்டல் செய்தால் என்ன செய்ய வேண்டும்? அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் முகமது இத்ரீஸ் (கரிமேடு), பாலமுருகன் (தல்லாகுளம்), செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிப்பதற்காக கூடுதல் காவல் துணை ஆணையர் தலைமையில் குற்ற தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான குற்றங்களை எந்தவித தயக்கமுமின்றி இலவச தொலைபேசி எண்கள்: 181, 1098, இணைய வழி குற்றங்கள் தொடர்பாக சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண்: 1930, வாட்ஸ்அப் செயலி எண்: 83000-21100, “நம் காவல்” செயலி மற்றும் மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 0452-2330070, 0452-2520760 ஆகியவற்றின் மூலமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின் விபரங்கள் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.