ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. இந்நிலையில் நவம்பர் 26- ஆம் தேதி மாலை சதீஷ் மற்றும் அவரது தம்பி வினோத் இருவரும் தங்களது குடும்பத்துடன் வேண்டுதல் நிறைவேற்ற விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
நவம்பர் 27- ஆம் தேதி அதிகாலை அவர்கள் திரும்ப வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு அறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 16 சவரன் தங்க நகை மற்றும் 45,000 ரொக்கம் கொள்ளை போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகினர்.
இதுகுறித்து சதீஷ், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடியை சுற்றியுள்ள கிழ்முருங்கை மற்றும் இப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கோவில்கள், வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாக உள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்