Police Department News

`ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க; இது நவீனரக துவரைச் செடி!’- 2 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட கரூர் ஆசாமி கரூரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர்

`ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க; இது நவீனரக துவரைச் செடி!’- 2 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட கரூர் ஆசாமி
கரூரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர்.
கரூர் மாவட்டம் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு மைலம்பட்டி டு குளித்தலை செல்லும் சாலையில் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தைக் கவனிக்கும் பணிகளை அவரது உறவினரான நிஜாமுதீன் கவனித்து வந்தார். இவர்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை கடவூர் சின்னவேடப்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் குத்தகைக்கு எடுத்து வெள்ளாமை செய்து வந்தார். வெள்ளாமை என்றால் நெல்லோ, கரும்போ, கடலையோ போட்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். கஞ்சா செடிகளை, இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, காவல்துறையிடம் வசமாக மாட்டியுள்ளார். மைலம்பட்டியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில், அருணாசலம் பயிரிட்ட கஞ்சா செடிகளை, திருச்சி போதைப் பொருள் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்தனர்.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் கலைச்செல்வன், காவலர் படையோடு மைலம்பட்டி சென்றார். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனும், போலீஸ் படையோடு அங்கு செல்ல, மைலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அருணாசலம் குத்தகைக்கு எடுத்த தோட்டத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்திய போலீஸார், உள்ளே பயிரிட்ட கஞ்சா செடியை அழித்தனர். மக்கள், மீடியா என யாரையும் கஞ்சா பயிரிட்டுள்ள இடத்துக்குள் அனுமதிக்கவில்லை. இரண்டு கஞ்சா செடிகளைக் கொடுத்து, மீடியாவைச் சேர்ந்தவர்களை போட்டோ, வீடியோ எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
குத்தகைதாரர் அருணாசலம் பெங்களூருவில் இருப்பதால், அவரது தோட்டத்தில் வேலை பார்க்கும் தேனி மாவட்டம், வருசநாட்டைச் சார்ந்த முருகன், அருணாசலத்தின் மாமனார் தங்கவேல் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தகவல் தெரிவித்தார். அதோடு, பயிரிடப்பட்டுள்ள கஞ்சா செடியில் சுமார் 250 கிலோ கஞ்சா இருக்கும் என்றும் அதன் சந்தை மதிப்பு ரூ 12,50,000 இருக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், “நிஜாமுதீன் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அருணாசலம், 2 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளார். அந்தத் தோட்டத்துக்குள் யாரையும் விடமாட்டார்கள். ஆட்கள் புழக்கமும் அதிகமா இருந்துச்சு. அரசல்புரசலா சந்தேகம் வந்து, உள்ளார எட்டி எட்டிப் பார்ப்போம். உடனே அவர், ‘இப்படி ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க. நவீன ரக துவரைச் செடி போட்டிருக்கிறேன்’ என்று சொல்லி மழுப்பி வந்தார்.
ஆனா, இப்பல்ல தெரியுது, அவர் எங்ககிட்ட முழுபூசணிக்காயை சோத்துல மறைத்த விஷயம். காவல்துறை கஞ்சா அளவை கம்மியா காட்டுது. இந்த வழக்கை முறையா விசாரிக்கணும்” என்றார்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.