பென்னாகரம் அருகே
விவசாய கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
பென்னாகரம், மார்ச்.12-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், ஒகேனக்கல், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள வயல்களில் புகுந்து பயிர்களை மதித்தும் தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டி யானை பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதன் காரணமாக நாய்கள் தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்தன. இதனால் செல்வன் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் குட்டியானை விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை பார்த்தார். இது குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த குட்டி யானையை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட குட்டி யானை போடூர் சின்னாறு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது