பொள்ளாச்சியில் காக்கா பிரியாணி விற்பனையா?- கடைகளில் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியாக்கவுண்டனூரில் கடந்த சில நாட்களாக காகங்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. எதனால் காகங்கள் இறந்து கிடக்கிறது என தெரியாமல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குழப்பம் அடைந்தனர்.
யாராவது விஷம் வைத்து கொன்றனரா? அல்லது இயற்கையாகவே இறந்து விழுந்ததா? என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் அதனை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த விவசாயியான நாகராஜ் தனது தோட்டத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் நடமாடினார். மேலும் அவர் இறந்த காகங்களை எடுத்து தனது சாக்கு பையில் போட்டு கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அவருக்கு சந்தேகம் எழுந்து, நேராக சென்று வாலிபரிடம் விசாரிக்க முயன்றார். இதனால் உஷாரான அந்த வாலிபர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதையடுத்து அவர் மற்ற விவசாயிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
பின்னர் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த நபரை விரட்டி சென்று, சந்திராபுரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை தங்கள் ஊருக்கு அழைத்து வந்தனர். மேலும் சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் காகங்களுக்கு ஏதோ வீசி கொண்டிருந்தார். அதை சாப்பிட்ட காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டன.
இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம் என்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் குஜராத்தை சேர்ந்த சூர்யா(வயது37) என்பதும், பொள்ளாச்சி அருகே சிஞ்சுசாவடியில் தங்கி சர்க்கசில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
தனது மகனுக்கு வெள்ளை படை நோய் இருப்பதாகவும், அதற்கு மருந்து தயாரிக்கவே காகங்களுக்கு விஷம் கலந்த உணவை வீசி கொன்றதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
இருப்பினும் அந்த சூர்யா கூறுவது நம்பும் படியாக இல்லை. மருந்து தயாரிப்புக்கு என்றால் எதற்காக 50 காகங்களை வேட்டையாட வேண்டும் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு கடைகளில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக தகவல் பரவியது. இது அங்கு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சூர்யாவும், பொள்ளாச்சியில் காகங்களை வேட்டையாடி, இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே பொள்ளாச்சியில் பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
இதற்கிடையே பொள்ளாச்சியில் உள்ள கடைகளிலும் காக்கா பிரியாணி விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ள போலீசார் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்