Police Department News

மதுரையில் கஞ்சா விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் கைது

மதுரையில் கஞ்சா விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் கைது

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. மதுரை நகர் பகுதியிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி சமூக விரோத கும்பல் கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது.

இந்த நிலையில் கஞ்சா விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் எச்சரித்திருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கஞ்சா விற்று கைதானவர்களின் சொத்துக்களை போலீசார் முடக்கினர்.

மதுரை நகர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரன் நாயர் கஞ்சா விற்பனையை தடுக்க தனி கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுத்தார். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் கடச்சனேந்தல்-ஊமச்சிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது 72 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த அய்யர்பங்களா ஜி.ஆர்.நகரை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பரமேஸ்வரன் தொடக்க காலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என பரமேஸ்வரன் முடிவு செய்தார். அதற்காக அவர் தவறான வழியை தேர்ந்தெடுத்தார். அதன்படி வெளி மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்று வந்துள்ளார். இந்த தொழிலுக்கு அவரது மனைவி விஜயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார்.

கஞ்சா விற்பனையில் பரமேஸ்வரனுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ஆந்திராவில் இருந்து கிலோ கணக்கில் லஞ்சம் வாங்கி சமூக விரோதிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு சப்ளை செய்தார். இதில் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஆடம்பர பங்களா, 5 கார்கள், 14 செல்போன்கள், தங்கச்சங்கிலி உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். ஏற்கனவே கஞ்சா கடத்தல் தொடர்பாக பரமேஸ்வரன் மீது செல்லூர் போலீசில் 2 வழக்குகள் உள்ளன.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பரமேஸ்வரனை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.