Police Department News

மர இழைப்பு நிலையத்தில் பயங்கர ‘தீ’- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

மர இழைப்பு நிலையத்தில் பயங்கர ‘தீ’- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் ஏராளமான மர இழைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல், நிலை உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக மர பொருட்களை கொண்டு சென்று இழைத்து வருகிறார்கள்.

பிரானூர் பார்டரில் ஒரு மர இழைப்பு நிலையம் உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் இந்த கடையை அடைந்து விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் செங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவ சங்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

எனினும் அங்கு ஏராளமான மரத்துண்டுகள் வைக்கப்பட்டு இருந்ததால் அவற்றில் தீ பரவி மளமளவென எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தென்காசி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும் மாவட்ட தீயணைப்பு இணை அலுவலர் சுரேஷ் ஆனந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவரது ஆலோசனையின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2½ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைத்தனர்.

சம்பவம் நடந்த மர இழைப்பகத்தின் அருகே ஏராளமான ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு சமையலுக்காக கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. சரியான நேரத்திற்குள் மர இழைப்பகத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டதால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும் மர இழைப்பு நிலையத்தில் உள்ள பல லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.