Police Department News

கடல் கொந்தளிப்பிலும் தொடரும் கடத்தல்!- ராமேஸ்வரம் போலீஸுக்கு அதிர்ச்சி

கடல் கொந்தளிப்பிலும் தொடரும் கடத்தல்!- ராமேஸ்வரம் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பீடி இலை மூட்டைகள்
தொடர் மழை பெய்து வந்ததுடன் கடல் கொந்தளிப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரைப் பகுதியில் பீடி சுற்றப் பயன்படும் பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கின.
இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 400 கிலோ பீடி இலைகள் தங்கச்சிமடம் அருகே கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதும், இங்கிருந்து கஞ்சா, பீடி இலைகள், போதைப் பொருள்கள் கடத்துவதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இருபுறங்களிலும் இருந்து கடத்திவரும் கடத்தல் பொருள்கள் அவ்வப்போது அதிகாரிகளிடம் சிக்கினாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ராமேஸ்வரம் பகுதியில் மழை விட்டுவிட்டுப் பெய்துவருகிறது. மேலும், தனுஷ்கோடி, ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டு வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இப்பகுதிகளில் நேற்று முன்தினமும், நேற்றும் தொடர்மழை பெய்து வந்ததுடன் கடல் கொந்தளிப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரைப் பகுதியில் பீடி சுற்றப் பயன்படும் பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கின. தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியிலிருந்து பாம்பன் நாலுபனை கிராமம் வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வடக்கு கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்த பீடி மூட்டைகள் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு வந்த மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் கடற்கரைப் பகுதிகளில் ஒதுங்கிக் கிடந்த சுமார் 400 கிலோ பீடி இலைகளைக் கைப்பற்றினர். பீடி இலை மூட்டைகளை இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் படகு சிக்கியிருக்கலாம் எனவும், எனவே கடத்தல்காரர்கள் அவற்றைக் கடலில் போட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அடாத மழை மற்றும் கடல் கொந்தளிப்புக்கு இடையிலும் கடத்தல் நடவடிக்கைகள் இடைவிடாமல் நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷம் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.