விபத்து பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்: ஒருவர் பலி- 22 பேர் படுகாயம்
ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு பாலி அலுமினிய குளோரைடு என்ற ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தேவராஜ் என்பவர் ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்-பழனி சாலை கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே வந்தபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் ஏதேனும் பழுது நீக்கும் கடை உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார்.
அப்போது கோவையில் இருந்து தேனிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரராஜபெருமாள்(34) என்பவர் ஓட்டிவந்தார். வேல்முருகன் என்பவர் கண்டக்டராக இருந்தார். சுமார் 25 பேருடன் வந்த பஸ் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காமல் அதன்மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அரசு பஸ்சின் பக்கவாட்டு பகுதி முற்றிலும் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறிஅடித்து கூச்சலிட்டனர்.
இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கன்னிவாடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் விபத்தில் டிரைவர் சீட்டின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோவை மாவட்டம் சோமையனூர் தனுவாய் பகுதியை சேர்ந்த அய்யப்பன்(40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விஷாலினி(14), ராஜபாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி(23), உத்தமபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(30), திருப்பூரை சேர்ந்த சுவேதா(25) உள்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் ஸ்பிரிட் ஏற்றி வந்த லாரியில் இருந்து பாலி அலுமினிய குளோரைடு சாலையில் ஆறுபோல் ஓடியது. ஒருவித நெடியுடன் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருந்ததால் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சீரானது.
இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.