Police Department News

கோவையில் 100 பவுன் நகை-2½ கோடி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

கோவையில் 100 பவுன் நகை-2½ கோடி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

கோவை புலியகுளம் ரோடு கிரீன் பீல்ட் காலனி சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவருக்கு சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

இதனால் அடிக்கடி வர்ஷினி ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றார். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு வர்ஷினி, ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அங்கு வர்ஷினி ராஜேஸ்வரிக்கு இரவு உணவு கொடுத்து தூங்க வைத்தார்.

பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் ராஜேஸ்வரியின் படுக்கை அறையில் கப்போர்டில் வைத்திருந்த 100 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ. 2.50 கோடி ரொக்க பணம் ஆகியவற்றை தனது கூட்டாளிகளான அருண்குமார், கார் டிரைவர் நவீன் குமார் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பி சென்றார்.

இதுகுறித்து ராஜேஸ்வரி ராமநாதபுரம் போலீஸ் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த வர்ஷினி, அருண்குமார், நவீன் குமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அருண்குமாரின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்குள்ள வீட்டில் பதுங்கி இருந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மேட்டு தெருவை சேர்ந்த அருண்குமார் (37), அவருக்கு உதவிய பிரவீன் (32), மற்றும் சுரேந்தர் (25)ஆகியோரை கைது செய்தனர்.

அப்போது அருண்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

கொள்ளையடித்த பணத்தில் இருந்து ரூ. 33 லட்சத்து 20 ஆயிரம், மற்றும் 6 ஜோடி தங்க வளையல்களை வர்ஷினியிடமிருந்து வாங்கிக் கொண்டு எனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சுரேந்தர் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தேன்.

கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பிய பணம் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரத்து 500 சேலம் வருமானவரித்துறை அதிகாரியிடம் பிடிபட்டது. நகைகளை தனது மற்றொரு நண்பரான சுரேந்தரிடம் கொடுத்து வைத்துள்ளேன்.

இவர் அவர் கூறினார்.

அவரிடம் இருந்து போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்க பணம் 6 ஜோடி தங்க வளையல்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் போலீசார் அருண்குமார், பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகிய 3 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வர்ஷினி, கார்த்திக், நவீன் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.