காரில் வலம்வந்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காரைக்குடி போலீஸார் கைதுசெய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த தேர்முட்டி பகுதியில் வசித்துவருகிறார், ஜவுளிக்கடை தொழிலதிபர் இளங்கோமணி. கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, ஒருவாரம் கழித்து கடந்த 15-ம் தேதி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, 250 பவுன் நகையும் ரூ.5 லட்சம் பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை என்பதால், குற்றவாளிகளைக் கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் நீடித்தது. இருப்பினும் தொடர் விசாரணை செய்த போலீஸார், அந்தப் பகுதியைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அப்பகுதியில் கார் ஒன்று சுற்றிவந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அந்த காரின் வீடியோ பதிவுகள் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், காரை மடக்கினர். விசாரித்ததில், அந்த காரில் சுற்றியது அன்புகுமார், சதீஷ், சிவராஜா என்ற 3 பேர் எனத் தெரியவந்தது. அவர்களிடம் ஜவுளிக்கடை அதிபர் வீட்டு கொள்ளை குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். முதலில் மறுத்த அவர்களிடம் போலீஸார், தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது, திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் மூன்று பேரும் அகதிகள் முகாமில் தங்கியிருப்பதும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நண்பர்களானதும் தெரியவந்தது. மேலும், பகல் நேரங்களில் காரில் கூட்டாகச் செல்லும் அவர்கள், ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு வந்து, இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபடுவதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.திருடிய பின்னர், அந்தப் பணத்தை சுற்றுலாத் தளங்களுக்கு சென்று ஆடம்பரமாகச் செலவழித்துவந்துள்ளனர். அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, பின்னர் மீண்டும் வந்து தங்களது பணியைத் தொடர்வது வாடிக்கையாம். காரின் நம்பர் பிளேட்டை அடிக்கடி மாற்றுவதும், திருடப்போகும் வீடுகுறித்து குறிப்பு எடுத்துக் கொண்டு திருடுவதும் இவர்களது டெக்னிக் என்கிறார்கள் போலீஸார். இதேபோல், பல்வேறு இடங்களில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.
போலீஸ் இ நீயூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்