காலமான மாமியார் கனவில் தோன்றி அழைத்ததாகக் கூறி மருமகள் விபரீத முடிவு
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன் மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் மாதம் இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து தன் மீது பாசமாக இருந்த மாமியார் கனவிலும், நேரடியாகவும் தோன்றி அழைப்பதாக கூறி ஆனந்தி அடிக்கடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் புலம்பி கொண்டிருந்தார். இதனால் அவரை கோவில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர். மேலும் சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு மாமியாரிடம் செல்வதாக கூறி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் ஆனந்தியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.