தற்கொலை செய்ய முந்தைய நாள் இரவே முடிவு செய்த டி.ஐ.ஜி. விஜயகுமார்
பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார்
டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது.
கோவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மற்ற போலீஸ்அதிகாரிகள் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை என கூறி இருக்கிறார்.
பிறந்தநாள் விழா முடிந்ததும் டி.ஐ.ஜி. விஜயகுமார் இரவிலேயே முகாம் அலுவலகத்துக்கு திரும்பி இருக்கிறார். அப்போது தனது பாதுகாவலரிடம் நீ பயன்படுத்தும் துப்பாக்கியை எங்கே வைப்பாய், குண்டு நிரப்பி வைப்பாயா? என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பாதுகாவலரும் விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு விஜயகுமார் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்திருக்கிறார்.
நேற்று காலை விழித்தெழுந்து வந்து பாதுகாவலர் பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் டி.ஐ.ஜி. சில நாட்களாகவே தற்கொலை எண்ணத்துடன் இருந்தது தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யும் நோக்கிலேயே பாதுகாவலரிடம் துப்பாக்கி பற்றி விசாரித்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது.