மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா விற்பனை மோதலில் கும்பல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 8 பேர் கைது
மதுரை மாவட்டம் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களால் அதற்கேற்றவாறு குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது.
இதில் சோழவந்தான் அருகேயுள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (28). இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.
பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பிரிந்தனர். இதனிடையே வெளியூர் நபர்களும் அந்த பகுதிக்கு வந்து கஞ்சா விற்பனையை தொடங்கினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது. அவர்களுக்கு பிரகாசின் பழைய கூட்டாளி வல்லரசு ஆதரவாக இருந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட நாச்சிகுளத்தை சேர்ந்த பிரகாஷ் அவர்களிடம் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதைப்பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகராறை விலக்கிவிட்டு கலைந்து போக செய்தனர். இருந்தபோதிலும் அந்த பகுதி பதட்டமாகவே காணப்பட்டது.
இதற்கிடையே நாச்சிகுளத்தை அடுத்த விசாலாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வல்லரசு தரப்பினர் கும்பலாக அமர்ந்திருந்த பிரகாஷ் தரப்பினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் தப்பித்து விட்டனர். மாட்டிக் கொண்ட மதுரையைச் சேர்ந்த மார்க்கண்டேயனை வல்லரசு தரப்பை சேர்ந்தவர்கள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 12, 13, 14 வயதுள்ள சிறுவர்கள் மற்றும் நாச்சிகுளம் பிரதாப் (25), டேவிட் (27) உள்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று விக்கிரமங்கலம் பகுதிகளிலும் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் மோதல்கள் தொடர்பான பிரச்சினையில் தலையிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா, மது போதையில் விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை கம்பு, கட்டைகளால் சிறுவர்கள் தாக்கிய சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.