Police Department News

நெல்லை அருகே நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் மற்றும் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நெல்லை அருகே நிலத்தை அளக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் மற்றும் உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நெல்லை அருகே கங்கைகொண்டான் வடகரையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் புதுமாடசாமி (வயது 44). இவர் கங்கைகொண்டானில் காய்கறிக்கடை நடத்தி வருகிறார். கங்கைகொண்டான் வடகரை பகுதியில் இவர் 26 சென்ட் நிலம் வாங்கினார். பின்னர் அந்த நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்கக்கோரி, நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி மனு வழங்கினார்.

அந்த மனு, கங்கைகொண்டான் பிர்கா நில அளவையர் லிங்கம்மாளுக்கு (31) சென்றது. இதையடுத்து நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க சிபாரிசு செய்வதற்கு நில அளவையர் லிங்கம்மாள் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தருமாறு புதுமாடசாமியிடம் கேட்டார். அவர், அதிக பணம் தரமுடியாது என்று கூறியதால், ரூ.25 ஆயிரம் தருமாறு லிங்கம்மாள் கேட்டதாக கூறப்படுகிறது.

எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத புதுமாடசாமி, இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லின் எஸ்கால் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை புதுமாடசாமியிடம் கொடுத்து, அதனை நில அளவையர் லிங்கம்மாளிடம் வழங்குமாறு போலீசார் கூறினர்.

அதன்படி, நேற்று புதுமாடசாமி கங்கைகொண்டான் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த நில அளவையர் லிங்கமாளிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அவர், அந்த பணத்தை அருகில் இருந்த தனது உதவியாளர் சாந்தியிடம் (51) கொடுக்குமாறு கூறினார். அந்த பணத்தை சாந்தி பெற்று கொண்டார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாந்தியையும், நில அளவையர் லிங்கம்மாளையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் நில அளவையர் லிங்கம்மாள், சாந்தி ஆகியோரை நெல்லை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நீதிபதி (பொறுப்பு) மனோஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான நில அளவையர் லிங்கம்மாள் பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவிலும், அவரிடம் உதவியாளராக இருந்த சாந்தி கங்கைகொண்டான் ராஜபதியிலும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.