ஆட்டோவில் தவறவிட்ட. ஒரு லட்சம் ரூபாயை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு
சென்னை எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதர் (48). இவர்நேற்று முன்தினம் மாலை வள்ளுவர்கோட்டம் லேக் ஏரியாவில் இருந்துபெண் பயணி ஒருவரை ஆட்டோவில் சவாரியாக ஏற்றிக் கொண்டுதி.நகரில் இறக்கிவிட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து வேறோருபயணியை ஏற்றிக் கொண்டு அரும்பாக்கத்துக்கு சென்றார்.
அங்கு சவாரிக்காக காத்திருந்தபோது, தனது ஆட்டோவின் பின் இருக்கையில் கைப்பை ஒன்று இருப்பதைக் கண்டார். அதை எடுத்துத் திறந்து பார்த்தபோது அதில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 490 இருந்தது. மேலும், ஓர் அடையாள அட்டையும் இருந்துள்ளது.
இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதர் அந்த பணம் மற்றும் பொருட்களை வேப்பேரியில் உள்ள காவல்ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கச் சென்றார். அங்கு பணியிலிருந்த காவலர்கள் பையை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.
இதையடுத்து, ஸ்ரீதர் வேப்பேரிகாவல் நிலையம் சென்று ஒப்படைத்தார். பின்னர், அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து விசாரித்ததில் பணப்பையைத் தவறவிட்ட பயணி நுங்கம்பாக்கம், கிராஸ் லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா என்பது தெரியவந்தது. உடனே அவரை செல்போன்மூலம் காவல் நிலையம் வரும்படிஅழைத்தனர். இதையடுத்து, அவர்இரவு 7.30 மணியளவில் கணவருடன் வந்து தான் தவறவிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பூர்ணிமா நேர்மையுடன் நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.5 ஆயிரம் பணத்தைச் சன்மானமாக வழங்கினர். ஆட்டோ ஓட்டுநர் அதை வாங்க மறுப்பு தெரிவித்தும் விடாப்பிடியாகக் கொடுத்தார். மேலும், ஆட்டோ ஓட்டுநருக்கும், காவல் துறைக்கும் பாராட்டு தெரிவித்தார்.