கோவையில் .. போலீஸ் சட்டையில் கேமரா
கோவை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கவும் 26000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரம் என்றால் அது கோயம்புத்தூர் நகரம் தான். சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் அசுர வளர்ச்சி அடையும் நகரம் என்று சொன்னால் அது கோவைதான். கேரளாவின் நுழைவு வாயிலாக திகழும் கோவையில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இருக்கின்றன.
கோவை முதல் அவினாசி வரை 40 கிமீ தூரத்திற்கும் கோவை தொழிற்சாலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுக்கரை முதல் கருமத்தம்பட்டி வரையிலும், கிணத்துக்கடவு முதல் மேட்டுப்பாளையம் வரையிலுமே கோவை விரிந்து கிடக்கிறது. இந்த பக்கம் தொண்டாமுத்தூர் தொடங்கி கருமத்தப்பட்டி வரையிலும் கோவை அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.
கோவையின் உள்பகுதிகளில் முன்பெல்லாம் திரும்பிய பக்கம் எல்லாம் தொழிற்சாலைகள் நிரம்பி வழியும். இப்போது பல தொழிற்சாலைகள் நகருக்கு வெளியே போய்விட்டன. நகரின் உள்ளே குடியிருப்புகள் தான் மிகமிக அதிகமாக உள்ளன. கோவையில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலே இதற்கு சாட்சி. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை போல் ஒவ்வொரு பகுதியிலும் மேம்பாலம் போட வேண்டிய நிலை விரைவிலேயே வரலாம். அந்த அளவிற்கு நெருக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கவும் 26000 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை வழங்கிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் நடவடிக்கை மற்றும் பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை மாநகரில் 25 போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கைதிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் 12 வாகனங்களில் தற்போது 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்தும் கண்காணிக்கப்படும். கோவை மாநகர பகுதியில் மொத்தம் 26 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சாலை தெரியும் வகையில் 15 ஆயிரம் கேமராக்கள் உள்ளன. இந்த கேமராக்கள் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மிக எளிதாக கண்டுபிடிக்க உதவுகிறது.
இது தவிர ரூ.55 லட்சத்தில் 110 அதிநவீன கேமராக்கள் கோவை மாநகரம் முழுவதும் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த கேமராக்ககள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. பொதுமக்களும் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என்றார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கோவை மாநகர காவல் துறையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் அடங்கிய பேரிடர் மேலாண் மை குழுவினர் தயாராக உள்ளார்கள் என்றும் அவர்களுக்கு நவீன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.